வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடனான சந்திப்பிற்கான நேரம்- இடம் என்பன நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி துறைக்கான செயலாக்க ஆணையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
வடகொரிய தலைவருடனான இரண்டாவது உச்சிமாநாட்டிற்கான இடம், நேரம் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் வடகொரியாவுடன் பாரிய முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். நாம் வடகொரியாவுடன் போர் தொடுப்போம் என்றே அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது மாத்திரமின்றி போர் தொடுக்குமாறு அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டன.
அவ்வாறு செய்திருந்தால் மில்லியன் கணக்கான மக்களின் உயிர் காவுகொள்ளப்பட்டது மாத்திரமே முடிவாக இருந்திருக்கும்.
ஆனால், எமது சுமூகமான பேச்சுவார்த்தைகளின் மூலம் வடகொரியா தமது ஏவுகணை சோதனைகளை நிறுத்தியுள்ளது. ரொக்கெட் சோதனைகள் இல்லை. அணுவாயுத சோதனைகள் இல்லை” எனத் தெரிவித்தார்.