வவுனியா, பெரிய கோமரசங்குளத்தின் யேசுபுரம் பகுதியிலுள்ள மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள சிறிய மலைக் குன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்துவரும் மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடில் ஒன்றை அமைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இப்பிரதேசத்தில் கல் உடைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்களின் வீடுகளில் வெடிப்புகள் உருவாகுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கல்லுடைப்பதற்கு பயன்படும் வெடிபொருட்களிலிருந்து பரவுகின்ற நச்சுதன்மையை குழந்தைகள் சுவாசிக்கும்போது அவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த மக்கள், இதையடுத்து குறித்த பகுதியில் கல் உடைப்பதால் பாதிப்புகள் ஏற்படுகின்றதா என்று அதிகாரிகள் குழு ஆய்வுசெய்ததன் பின்னர் கல் உடைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த ஆய்வு நடவடிக்கையின் போது சிறிய அளவிலான வெடிபொருட்களே பயன்படுத்தபட்டதாகவும் தற்போது மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டும் கிராமவாசிகள், குறித்த மலையும் அதனை அண்டியுள்ள காணிகளும் எமது கிராமத்திற்குரியவை எனவும் அந்த வளத்தை இல்லாமல் செய்வதை நாம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே குறித்த மலையில் கல்லுடைக்கும் பணிக்கு முற்றுமுழுதாக தடைவிதிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.