ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தமிழ் அரசியல் கைதிகளை தாம் விடுதலை செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தமிழ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விஜேராமவில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இன்றைய தினம் காலை நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இவற்றைக் கூறியுள்ளார்.
மிகப் பாரியளவில் குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்கும் எனவும், ஏனையவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மன்னிப்பு வழங்கப்படும் போது அனைத்து தரப்பினருக்கும் அது பொதுவானதாக இருக்குமே தவிர பக்கச்சார்பு நிலைமை இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அந்த முயற்சி வெற்றயளிக்காவிட்டால் நேரடியாக தமிழ் மக்களுடன் பேசி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
புதிய அரசியல் அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தேவையான வகையில் அவசர அவசரமாக கொண்டு வரப்பட முடியாது எனவும், அதனை மிக நிதானமாக ஆராய்ந்து உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.