ல் கூறியபடி இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, அடுத்தகட்டமாக எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்து, தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை வழக்கறிஞர் சங்க செயலாளர் செல்வராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மணப்பாறை முன்சீப் நீதிமன்றத்தின் முன்பு, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு வரும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, முன்சீப் நீதிமன்றம் முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்றி, வேறு பகுதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று விசாரித்தனர். டாஸ்மாக் சார்பில், ‘சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘மது அருந்துவோர் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளன? இவற்றில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியவை எத்தனை? இவை இயங்கும் கட்டிடங்களுக்கு திட்ட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா? இவற்றில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள், உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் உள்ளதா? பார்களில் உணவுப்பொருட்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வில் ஈடுபடுகின்றனரா? உரிமம் பெறாத பார்கள் எத்தனை உள்ளன. ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? அடுத்த கட்டமாக எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்து டாஸ்மாக் இயக்குனர் மற்றும் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4க்கு தள்ளி வைத்தனர்.