2020ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி ஆகியனவற்றுக்கான பதக்கங்கள் இலத்திரனியல் கழிவுகளில் கிடைக்கும் உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.
தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்கள் அனைத்தும் செல்லிடப்பேசிகள், மடிக் கணனிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மீள் சுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் இலத்திரனியல் கழிவுகளை திரட்டி அவற்றை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 30 கிலோம் கிராம் எடையுடைய தங்கம், 4100 கிலோ கிராம் எடையுடைய வெள்ளி மற்றும் 2700 கிலோம் எடையடைய வெண்கலம் என்பன திரட்டப்பட்டு பதக்கங்கள் உருவாக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலத்திரனியல் கழிவுகளை மீள் சுழற்சி செய்து உலோகங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பூர்த்தியாகும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டில் பிரேஸிலின் ரியோ ஜெனய்ரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது 30 வீதமான வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மீள் சுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.