தாய்லாந்தில் வரும் மார்ச் மாதம் 24ம் தேதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது.
தாய்லாந்தில் பல காலமாகவே ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையே ஏற்பட்ட ஜனநாயக ஆட்சிகளும் ராணுவத்தால் வலுக்கட்டாயமாக முறியடிக்கப்பட்டது. பிரதமர்களாக பொறுப்பேற்றவர்கள் நாட்டை விட்டு தப்பி சென்றனர்.
அந்த வகையில் கடைசியாக தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் யிங்லங் தலைமையில் நடந்த வந்த தாய் ரக்ஷா சார்ட் கட்சியின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
அப்போது பிரதமராக இருந்த யிங்லங் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க அவர் தாய்லாந்தை விட்டு தப்பி சென்றார்.
அதன் பின் கடந்த 5 ஆண்டுகளாக ஜுண்டா எனப்படும் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜுண்டா சார்பில் பிரயுத் சந்த்-ஓ-சா (Prayut Chan-O-Cha) தாய்லாந்து பிரதமராக உள்ளார்.
தாய்லாந்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையில் பிரதமர் பிரயுத் சந்த் –ஓ- சா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடக்கவுள்ள தேர்தலிலுக்கு பின்பும் ஜுண்டாவின் ஆட்சி தொடரும் என்றும் பிரயுத் சந்த்-ஓ-சா மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திருப்பம்
ஜுண்டா ஆட்சி தொடரும் என்று பலரும் எதிர்பார்த்துள்ள சூழ்நிலையில் தாய்லாந்து அரசியலில் புதிய திருப்பமாக தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி உபோல்ரதனாவை, தாய் ரக்ஷா சார்ட் கட்சி தங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இளவரசி உபோல்ரதனா தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கார்னின் மூத்த சகோதரி ஆவார்.
இளவசரசி உபோல்ரதனா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தாய்லாந்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு ஆளும் ஜுண்டாவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. ஏனென்றால் பிரதமர் பிரயுத் சந்த்-ஓ-சா தலைமையிலான ஜுண்டாவின் ராணுவ ஆட்சி தங்களை அரச குடும்பத்தின் பாதுகாவலர்கள் என கூறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஜுண்டாவின் அரசியல் எதிரியான தாய் ரக்ஷா சார்ட் கட்சி வேட்பாளராக அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது ராணுவத்தின் கூற்றை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இளவரசி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரதமர் பிரயுத் சந்த்-ஓ-சா தன்னை ஜுண்டாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து கொண்டார்.