தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என அரச தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராஜா குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட சாத்தியங்கள் குறைவு என தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு அவசரகால ஒழுங்குவிதிகள் நீக்கப்பட்டு விட்டதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவசரகால ஒழுங்குவிதிகளில் முக்கியமான சில விதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் சேர்க்கப்பட்டு அது சட்டமாக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச தலைவர் , பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக சில ஏற்பாடுகளையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதன் கீழ் கைது செய்யப்பட்ட எவரும் விடுவிக்கப்படவில்லை.
அதேபோன்று தான் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது என சட்டத்தரணி தவராஜா தெரிவித்துள்ளார்.





