பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்ட 5 பேருக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் சத்யபால் மாலிக் அம்மாநில உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்கள், வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார்.
முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என கடந்த 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்ட 5 பேருக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.