தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த 2018, டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில் இன்று (18.2.2019, திங்கள்கிழமை) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைத் திறக்கத் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வைகோ கருத்து
இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகள் போராடிய நான், 2010 செப்டம்பர் 28-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அவ்வழக்கில், ஆலையை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுநாளே உச்ச நீதிமன்றத்திற்கு சென்று உண்மைகளை மறைத்து ஸ்டெர்லைட் நிர்வாகம் அத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றது.
அதன்பிறகு துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். அதன்பிறகு நான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில், என் தரப்பில் வழக்கறிஞர் அஜ்மல் கான் வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். ஆனால், அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. பூனைக்கும் காவல் பாலுக்கும் காவல் என்ற இரட்டை நாடகத்தை அதிமுக அரசு நடத்தியது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை சென்றது. என்னுடைய மனுவை ஏற்க கூடாது என, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கூறினார். நான் அரசியல் செய்வதாக மனுவை ஏற்கக் கூடாது என கூறினார். நான் கடுமையாகப் போராடியதால் என் மனுவை ஏற்றனர். தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் விதிகளை மீறியிருப்பதை எடுத்துரைத்தேன் என வைகோ தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 8-ம் தேதி வைகோ முன்வைத்த வாதங்கள் இவ்வழக்குக்கு வலு சேர்ப்பவையாக அமைந்துள்ளன. 1998-ல் நீரி நிறுவனத்தின் தலைவர் புருஷோத்தம் கண்ணா, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை நாசமாக்குகிறது என அளித்த அறிக்கை, ஸ்டெர்லைட் ஆலையில் வைக்கப்பட்டுள்ள புகைப்போக்கியின் உயரக் குறைவு, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து எத்தகைய நச்சுகள் வெளியேறுகின்றன, பசுமை வளைவு அமைக்கப்படாதது, ஸ்டெர்லைட் ஆலை நச்சுப் புகையால் பூக்களின் நிறம் மாறியது என பலவற்றை, சுமார் 40 நிமிடங்கள் தன் வாதத்தில் வைகோ முன்வைத்தார்.
தெய்வங்களாகப் பார்க்கிறார்கள்
மக்களின் உண்மையான கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு மக்களை காப்பாற்ற தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை மக்கள் தெய்வங்களாகப் பார்க்கிறார்கள் என்று தீர்ப்பு வெளியானதும் வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசீய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு கொள்கை அடிப்படையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வேதாந்தா நிறுவனம் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அவர்கள் சென்னைக்கு வரட்டும். நான் இங்கே இருக்கிறேன். எதிர் வழக்காடுவேன் என்று வைகோ தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்தது மகிழ்ச்சியளிக்கிறது. என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் இன்றுதான், எனக் கூறிய வைகோ தட்டு நிறைய இனிப்புகளை வைத்து அனைவருக்கும் வழங்கினார்.