முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற இன்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும் இயலுமெனக் காட்ட இரவிலும் வான்புலிகள் நிகழ்த்திய கூத்தில் உமக்கினிச் சாமத்திலும் உறக்கமில்லையென பகைவர் காதிற் பாடிய நாள். கோட்பாடுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் அப்பாலான அசாத்திய அதிசயம். நேரிற்பார்த்த ஓரிருதமிழருக்குத் திவ்விய தரிசனம். இதுவரையான காலத்தில் ஈழத்தமிழரில் இருவருக்கே இறக்கை முளைத்திருந்தது. அன்று இராவணனுக்கு இன்று பிரபாகரனுக்கு. இராவணனின் ‘புஷ்பகம்’ சீதையைத் தூக்கித் திரும்பியது. பிரபாகரனின் ‘கற்பகம்’ கட்டுநாயக்காவைச் சுட்டுத் திரும்பியது. முன்னது வால்மீகியின் கற்பனை பின்னது வான்புலிகளின் அற்புதம். வன்னியிலிருந்து நீர்கொழும்புவரை பறத்தலென்பது வல்லரசுக்குச் சுண்டங்காய். போரிடும் விடுதலைப் பொறிகளுக்கு எல்லோருக்கும் எட்டாத இமயம் எட்டாத உயரத்தைத் தொட்டனர் ஈழத்தமிழர். நிலத்தை வசமாக்கி மு கடலை வசமாக்கி வானத்தையும் வசமாக்கிய வல்லமையால் ஈழத்தமிழரை எழுப்பம் தழுவியது. வான்புலிகளின் பறத்தலென்பது வெறும் வல்லமையை மட்டுமல்ல ஈழத்தமிழர் அழுதகாலம் முடிந்ததென்ற உரத்த குரலையுமே தூக்கிச்சென்றது கூடவே. நான்கு தமிழரின் சிறகு விரிப்பில் நாற்பது இலட்சம் ஈழத்தமிழரும் பறந்தனர். ஆச்சரியம் என்னவெனில் அதிகமானோர் தூக்கத்திலிருந்தனர் அப்போது. இது பிரகடனப்படுத்தாத யுத்தமென்பதால் இப்போது தருமயுத்தமே நடக்கிறது. இடைக்கிடை நகுல சகாதேவர் களம் புகினும் இன்னும் அருச்சுனர்கள் காண்டீபம் தரிக்கவில்லை. வீமர்கள் கதாயுதம் எடுக்கவில்லை. எவராயினும் கோத்தபாயாவை எழுதிவைக்கச் சொல்லுங்கள். சம்பூரைத் தோல்விக் கணக்கில் செலவுவைத்து புலிகள் வெளியேறவில்லை. வாகரையில் இருந்து புன்னகையில் அர்த்தம் சொல்லியே புலிகள் அகன்றனர். வான்புலிகளின் பறத்தல் என்பது புலிகள் அஸ்திரங்களைக் கையிலெடுத்ததற்கான அறிகுறி கரும்புலிகள் காண்டீபம் தரித்ததற்கான சாட்சி வெற்றியின் வரவு இனித்தான் வெளிச்சம்தரும். அன்றிரவு வானில் அழகாய் நிலவிருக்க என்றும் போல் காற்று இதமாய் வீசியது. நள்ளிரவு கட்டுநாயக்கா வான் பரப்பில் புள்ளியென ஏதோ புகுந்து பெரிதாகி வான் தளத்தில் தீபாவளியெனவே வெடிகொளுத்தி மீண்டும் திரும்பி மிதந்தபடி போயிற்று. ஈழத்தமிழன் இறக்கை கட்டி முகிலினுக்குள் வாழத்தொடங்கிய வரலாற்று நாளிதுதான். உலகத் திசையாவும் உதைபட்டு அகதியென நிலத்திற் புல்லாகி நின்ற தமிழினத்தோன் வானத்தில் ஏறி வரிசையெனப் பெருமகிழ்வில் கானத்தைப் பாடிக் களித்தான். தமிழ்த் தலைவன் ஈழத்தைப் பெறுவான் என்ற பெருநம்பிக்கை காலத்தில் மீண்டும் கால்பரத்திக் கொண்டதுகாண். நாளாந்தம் வந்து நம்குடிமேற் குண்டெறிந்து ஆளானதனைத்தும் அழித்தான். பள்ளிசென்ற பூவைத் தொலைத்தான். புதுமனையைப் போட்டெரித்தான். சாவையெம் வாசலிலே சபையிருத்திச் சாப்பிட்டான். கோயிலழித்தான். குடியிருப்பைப் போட்டெரித்தான். வாயெடுத்து அழக்கூட வகையற்று நமையழித்தான். காத்திருந்த தலைவன் கதைமுடிக்கத் தேதிவைத்தான். சாக்குருவியெல்லாம் சாகவொரு நாட்குறித்தான். தாயின் முலையினிலே தமிழ்ப்பால் குடித்தவர்கள் வாயிற்சிரிப்போடு வான்பறவை மீதமர்ந்தார். தலைவன் கையசைக்க தமிழ்வீரம் மெய்சிலிர்க்க முகிலைக் கிழித்தபடி மிதந்ததடா வானூர்தி. முகிலேறிப் போன முதற் குருவி நீர்கொழும்பின் அயலேறிப் பகைவரது அஸ்திரங்கள் எரித்ததுகாண். மற்றக்குருவி மடியிருந்த குண்டுகளால் கற்பனைக்கும் எட்டாத அற்புதங்கள் செய்ததுகாண். கொற்றம்நிறுவிவிட்டுக் கூடுவந்த குருவிரண்டும் மற்றத்தரம் பறக்க மறுபடியும் காத்திருக்கு. நிலம்மகிழ அந்த நீலவான்தான் மகிழ புலம்மகிழ புலத்தில் போயிருக்கும் தமிழ்மகிழ உலகம் முழுதும் உள்ள உறவுகளோ வாழ்த்துரைக்க ஈழவிடுதலைக்காய் எழுந்த பறப்பிதுதான். வாழும் காலத்தின் வரலாறு இதுவேதான். மானமேறி வாழ்தல் அவாவுறும் மரபுளோய்! உன்வாசல் வரிந்திதோ வானமேறி முகிலை உடுத்திடும் வாழ்வுனக்கென ஆனது தெய்வமே! காணநூறு கண்ணில்லையே நானதைக் கைகளாற் தொடவில்லையே தமிழனே! தான தானதை தோமெனத் துள்ளியே தமிழனேற்றிய ஊர்தியைப் பாரடா. கவியாக்கம்: வியாசன்