லண்டனில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை செய்து, சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்தும், அவர் சிறிலங்காவுக்குப் புறப்பட்ட விடயத்தில் பிரித்தானியாவின் பங்கு குறித்தும், பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சிறிலங்காவுக்குப் புறப்பட்டதில், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் இராஜாங்கச் செயலரிடம், அவரது திணைக்களத்தின் பங்கு என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன், கேள்வி எழுப்பினார்.
2019 ஜனவரி 21ஆம் நாளில் இருந்து அவரது திணைக்களம் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தொடர்பாக சிறிலங்கா தூதரகத்துடன் என்ன கலந்துரையாடலை நடத்தியது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த, ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட்,
“கடந்த ஆண்டு சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் தொடர்புபட்டிருந்த சம்பவம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் ஆழ்ந்த கரிசனையுடன் செயற்பட்டது. உடனடியாக சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றது.
2018 பெப்ரவரி 8ஆம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பாக பேசி, எமது கரிசனையை வெளிப்படுத்தினேன்.
அவரது அரசாங்கத்தினால் உடனடியாக பாதுகாப்பு ஆலோசகர் திருப்பி அழைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் பணியகம் ஒரு தரப்பாக பங்கேற்கவில்லை.
சம்பவம் நடந்து போது, பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர நிலை தொடர்பாக நீதிமன்றம் கேட்ட விளக்கத்துக்கு தேவையான ஆவணங்களை அளித்து உதவியது.
இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா பிரகடனம் உள்ளிட்ட சட்டத்தின் ஆட்சியை பேணுவதில் பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கேட்டுக் கொண்டதற்கு அமைய, அவரை சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜனவரி 24ஆம் நாள் சந்தித்தார்.
அந்தக் கூட்டத்தில், சம்பவம் நடந்த போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இராஜதந்திர விலக்குரிமையைக் கொண்டிருந்தார் என்பதே, தமது அரசாங்கத்தின் கருத்து என்று சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கூறியிருந்தார்.
பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் கடந்த பெப்ரவரி 1ஆம் நாள், வெளிவிவகாரப் பணியகத்தின் தெற்காசிய திணைக்களத் தலைவரைச் சந்தித்திருந்து, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.” என்றும் அவர் தெரிவித்தார்.