வடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான கதவடைப்புப் போராட்டம் ஒன்றை நடத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் எதிர்வரும் 20 ஆந் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டனப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளவேண்டுமெனவும், மூவினத்தவர்களும் தமக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும் சங்கத்தினர் கேட்டுள்ளார்கள்.
இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாதெனவும், சர்வதேச சமூகம் நேரடியாகத் தலையிடவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கவுள்ளதாக சங்கத்தினர் கூறியுள்ளார்கள்.
எதிர்வரும் 16 ஆந் நாள் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.