சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை இலங்கை அரசாங்கம் இலக்கு வைக்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்தவொரு மக்கள் சமூகமும் தங்களது சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு உரித்துடையது எனவும் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் இந்த விடயம் விதந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுய நிர்ணய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தனி நபர்கள் மீது அரசாங்கம் அடக்குமுறைகளை பல்வேறு வழிகளில் கட்டவிழ்த்து விடுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களே அதிகளவில் இவ்வாறான நெருக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பும், மனித உரிமைப் பேரவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால், சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொண்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் என்றும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.