அமெரிக்கா – எல்லையில் பாதுகாப்பு சுவர் கட்டும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு 100 கோடி டாலர் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பொறுப்பு தலைவர் பாட்ரிக் ஷனஹான் திங்கள்கிழமை தெரிவித்தார்.
![]() |
![]() |
மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோத குடியேறிகள் கடத்தல்காரர்கள் அமெரிக்காவில் ஊடுருவதை தடுக்க அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் பலமான சுவர் எழுப்பப்படும் என்று அதிபர் டிரம்ப் தன் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.
அதை தொடர்ந்து எல்லையில் சுவர் எழுப்ப அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
எல்லைச் சுவருக்கு அதிபர் டிரம்ப் கேட்கும் 800 கோடி டாலர் நிதியை ஒதுக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் தயாராக இல்லை.
அதன் காரணமாக அமெரிக்காவில் கடந்த மாதம் அவசரநிலை பிரகடனப்படுத்தினார் அதிபர் டிரம்ப்..
இதன்மூலம் எல்லைசுவருக்கு தேவைப்படும் நிதியை எம்.பிக்கள் அனுமதி இல்லாமல் அதிபரால் ஒதுக்க முடியும்.
இந்நிலையில் எல்லை சுவருக்கு 100 கோடி டாலர் நிதி ஒதுக்க பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க எல்லையில் 92 கிலோமீட்டருக்கு 5.5 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கவும் எல்லையில் உள்ள சாலைகளை மேம்படுத்தவும் அமெரிக்காவின் மத்திய உள்துறை அமைச்சகம் பென்டகனிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த பணியை நிறைவேற்ற இந்த 100 கோடி டாலரை ஒதுக்குவதாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டபடி 100 கோடி டாலர் மதிப்பிலான பணிகளுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும்படி அமெரிக்க ராணுவ பொறியாளர்களுக்கு பாட்ரிக் ஷனஹான் உத்தரவிட்டுள்ளார்.
பென்டகனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரும் டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆளுங்கட்சி எம்.பிக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.