வடகொரியா ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறது. எனவே இனி வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் ‘‘வடகொரியாவுடனான உறவை நான் பெரிதும் மதிக்கிறேன். தற்போது வடகொரியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்’’
‘‘இந்த சூழ்நிலையில் வடகொரியா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்க தேவையில்லை என நினைக்கிறேன். அதற்காக பின்னாளில் தேவைப்பட்டால் பொருளாதார தடை விதிக்க மாட்டேன் என அர்த்தமல்ல’’
‘‘வடகொரியாவின் இளம் அதிபருடன் என்னால் நன்றாக கலந்துரையாட முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டோம். வடகொரியாவுடனான உறவை நீண்ட நாள் நீடிப்பது மிகவும் முக்கியம்’’ என அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் அமெரிக்க நிதி அமைச்சகம் வடகொரியா மீது விதித்த கூடுதல் பொருளாதார தடையை அதிபர் டிரம்ப் உடனடியாக திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.