ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே தடையாக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டலஸ் அழகப்பெரும இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தில் கூறப்பட்ட விடயங்களை மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய மூன்று தரப்பினரும் விமர்சித்தனர்.
அதன்படி மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் கூறியதைப்போன்று நடந்து கொண்டன. ஆனால் இறுதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசிய கட்சியின் வரவு- செலவு திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியது
இவ்வாறு முறையற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.
மேலும் ஐ.தே.க.வின் 4 வருட நிர்வாகம் மக்களை பெரும் நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் அனைத்தையும் ஒன்றுப்படுத்தி பாரிய கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலம்பொருந்திய கட்சியாக மாற்றுவதற்கு, இரு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன ஆனால் பயனளிக்கவில்லை.
ஆனாலும் இவ்விடயம் குறித்து மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்” என டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.