வரி அறவீடு தொடர்பில் மோசடிகள் இடம்பெறக்கூடும் என கனேடிய வருமான முகவர் நிறுவனம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆண்டு தோறும் மக்கள் தாம் செலுத்திய வரி அறவீடு செய்யப்படும் காலப் பகுதி என்பதனால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வருமான முகவர் நிறுவனம் என்ற போர்வையில் சில நபர்கள் மக்களிடமிருந்து பண மோசடிகளில் ஈடபடக்கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய முகவர் நிறுவனத்தின் அதிகாரிகள் மக்களை தொடர்பு கொள்வதற்கும் போலியானவர்கள் தொடர்பு கொள்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி ஊடாக வருமான வரித்திணைக்கள முகவர் நிறுவன அதிகாரிகள் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது.
வரிச் செலுத்துகை மற்றும் ஏனைய வரி விவகாரங்கள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் அது குறித்து கனேடிய வருமான முகவர் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.