அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நீடிக்காதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த இரண்டு வழக்குகளும் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அரசியல் மாற்றத்துக்கான ஊக்கத்தை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டாபய ராஜபக்ஷ லொஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது சட்டவாளர்களைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தனக்கெதிரான வழக்குகள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்றும் செயன்முறைகளை தாமதப்படுத்துவதற்காகவும் தனது ஊக்கத்தைக் கெடுப்பதற்காகவுமே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கை கவனிக்கும் பொறுப்பை லொஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது சட்டவாளர்களிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்கள் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என தான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாவும் இந்த வழக்குகள், தன்னையும் தனது ஆதரவாளர்களையும் திசை திருப்புவதற்கான முயற்சியே என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்குப் பிடிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.