நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திருப்திக்கொள்ள முடியவில்லை என கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் இடம்பெற்றுள்ள இந்த அசாதாரண நிலைமைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துத் தலைவர்களும் கட்சிபேதம் பாராது, ஒன்றாக செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அரச தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்கள் ஒன்றாகக் கூடி இதுவிடயம் தொடர்பாக ஆராயவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நாசகாரச் செயலுக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், சிலரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து பாதுகாப்புத் தரப்பினர் விடுவித்துவிடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச்செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.