தமிழர்கள் மீதான அரசின் நம்பிக்கையின்மையும் புரிதல் இன்மையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனால், அக்காலப்பகுதியில் செய்த தவறை மீண்டும் செய்து தற்போதைய பயங்கரவாதமும் பலமடைய இடமளிக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பயங்கரவாதிகளை பிரதிபலிக்கும் எழுத்துக்களை நான் ஒருபோதும் உச்சரிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதனை உச்சரிப்பது அவர்களை நாம் ஏற்றுக் கொண்டதாக அமையும். எனவே, எந்தவொரு அரச தலைவரும் அதனை உச்சரிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாதிகளையும், அதனுடன் தொடர்புடையவர்களையும் ஒழிக்க வேண்டும் என்பதே தனது ஆலோசனை என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு தருணத்தில் முஸ்லிம் மக்களின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு செயற்படுவது அனைத்து அரசியல் தலைவர்களினதும் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவே விடுதலைப் புலிகள் பலம் பெற்றனர் என தெரிவித்துள்ளார்.
எனவே, அக்காலப்பகுதியில் தமிழர்களை பார்த்த அதே கண்ணோட்டத்துடன் முஸ்லிம் மக்களையும் நோக்காதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன் என அரச தலைவர் தெரிவித்துள்ளார்.