முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலக வேண்டுமென நாடளாவிய ரீதியில் போராட்டம் வலுவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் விசேட கலந்துரையாடலில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலின் பின்னர் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று நடைபெறவுள்ள ஊடகச் சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் கூறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை அரசு தலைவர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.
அரசு தலைவரின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அண்மையில் இம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை அரசு தலைவர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசு தலைவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.





