இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவையென கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற குழுவின் கூட்டத்தில் பிரேரணை ஒன்று லிபரல், கொன்சேவடிவ், என்டீபீ ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30ஃ1 மற்றும் 40ஃ1 ஆகிய தீர்மானங்களின் கீழுள்ள கடப்பாடுகளை குறிப்பிட்ட காலத்தினுள் நிறைவேற்றுமாறு கனேடிய அரசு இலங்கையிடம் விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதாக இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போரின் இறுதிப் பகுதி உள்ளடங்கலாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இந்தப் பிரேரணை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இந்தப் பிரேரணை குறித்த விரிவான அறிக்கை ஒன்றைக் கனேடிய அரசு சமர்ப்பிக்கவேண்டுமென பிரேரணையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.