2019ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீபில்ஸ், மைக்கேல் மேயர் மற்றும் திதியர் குயூலோஸ் ஆகிய 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. பிரபஞ்சம் தொடர்பான ஆய்வுகளுக்காக இந்த 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அண்டவியல் தொடர்பான இயற்பியல் கோட்பாடுகளை கண்டுபிடித்ததற்காக ஜேம்ஸ் பீபில்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அதேபோல் சூரியனை போன்ற மற்றோரு நட்சத்திரத்தையும் அதை சுற்றி வரும் கோளையும் கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர் மற்றும் திதியர் குயூலோஸுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாதமி ஆஃப் சயின்ஸின் பொது செயலாளர் பேராசிரியர் கோரன் ஹான்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த 3 பேரின் ஆராய்ச்சி பிரபஞ்சத்தின் பரிணாமம் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் பூமியின் இடம் ஆகியவை தொடர்பான புரிதலில் பெரும் பங்களித்துள்ளன என்றும் பேராசிரியர் கோரன் ஹான்சன் கூறினார்.
வரும் டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் வழங்கப்படும்.
திங்கள்கிழமை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெறுவோரின் விவரங்கள் வெளியான நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
நாளை வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்படும். வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு மற்றும் வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோரின் விவரங்கள் வெளியாகும்.
கடந்த ஆண்டு சுவீடிஷ் அகாதமி உறுப்பினரின் கணவர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. அதனால் இந்த வருடம் இலக்கியத்துறையில் இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.