சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் திட்டமிட்டு சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இம்முறை அதிகளவானோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில் முக்கியமான சிலரை விட ஏனையோர் வேறு காரணங்களுக்காக போட்டியிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
குறிப்பாக சிறுபான்மையினரின் இடங்களில் சிலரை களமிறக்கி அவர்களின் வாக்குகளை பிரிப்பதற்கான ஒரு தந்திரோபாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.
இதனை யார் செய்கின்றார்கள் என்று கூற முடியாது. தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகள் தான் உள்ளன. ஏனையோர் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதற்காக போட்டியிடுவதாகவே நான் பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.