இந்த ஒப்பந்தம் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம்(31) கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, நேற்று இது தொடர்பான அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் உடன்படிக்கை செய்து கொள்வதற்கு முன்னர் அதன் உள்ளடக்கங்களை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்களே இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலிற்குப் பின்னரே இதுபோன்ற எந்தவொரு ஒப்பந்ததும் கையெழுத்திடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஒப்பந்தத்தில் உள்ள உள்ளடக்கங்கள் பொது மக்களுக்குத் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரியாமல் உள்ளது.
எனவே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பு அதில் உள்ள உள்ளடக்கங்கள் பகிரப்பட்டு, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு இந்த ஒப்பந்தம் சிறிலங்காவிற்கு மட்டுமே உருவாக்கப்பட்டதைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்றால் ஏன் இரகசியம் காக்கப்படுகின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோருவதற்காக சிறிலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று(31) சந்தித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கமன்பில மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரே ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கையை முன்வைத்தனர்.
இதேவேளை அமெரிக்க மிலேனியம் ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திம்புல்கம்புரே ஸ்ரீ விமலதம்மா தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை தெரிவிக்க தேசிய அமைப்பு கூட்டுப் பிரதிநிதிகள் கண்டிக்கு சென்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடுகையில், சர்வஜன வாக்கெடுப்பின்றி அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை மேற்கொண்டால், நாட்டில் மிகவும் பயங்கரமான பிரதிபலனே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலுக்காக முழு நாடுமே தற்போது தயாராகி வருகின்ற நிலையில் இவ்வாறு ஒப்பந்தமொன்றை அவசரமாக செய்து கொள்வது எந்த விதத்திலும் தகுதியற்ற செயற்பாடேயாகும்.
கடந்த மே 31ஆம் திகதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதும் பொது மக்களது வாக்கெடுப்பின்றி இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது என்பதையே மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியிருந்தனர் என்பதை சுட்டிக்காட்டினார். இதற்கமைய நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் குறித்த அனுமதியும் இதுவரை பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் தனது அறிக்கையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.