கடன்பட்டுள்ள ஐந்து கனேடியர்களில் இருவர் தங்கள் வாழ்நாளில் கடனில் இருந்து தப்பிக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது.
மானுலைஃப் என்ற கனடா வங்கி வெளியிட்ட ஆய்வு முடிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 94 சதவீதம் பேர் தங்கள் சராசரி வருமானத்துக்கு அதிகமாக கடன் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
45 விகித கனேடியர்கள் தங்கள் வருமானத்தை விட செலவு வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
வசந்த காலத்தில் இதே கருத்தை 33 சதவீத கனேடியர்கள் கொண்டிருந்தனர். ஆனால் இலையுதிர் காலத்தில் இந்த விகிதாசாரம் 12 வீதத்தால் உயர்ந்து 45 வீதமாக அதிகரித்துள்ளது.
கனேடியர்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கணிசமான அடமானக் கடனை பெற்றுள்ளனர். இது வசந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிலிருந்து ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
60 சதவீதம் பேர் தங்களுக்கு கடன் அட்டைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இது வசந்த காலத்தில் 48 சதவீதமாக இருந்து இலையுதிர் காலத்தில் 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கடன் கண்காணிப்பு சேவை கூற்றுப்படி, நுகர்வோர் ஒருவரின் சராசரி மொத்த கடன் இவ்வருட இரண்டாவது காலாண்டில் தலா 71ஆயிரத்து 979 டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானுலைஃப் வங்கி தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிக் லன்னி, பாரிய நிதி நெருக்கடியில் கனேடிய மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதையே இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.