லண்டனில் இயங்கும் ஊபெர் ரக்ஸி சேவைக்கு புதிய உரிமம் வழங்கப்படாது என்று லண்டன் போக்குவரத்துத் துறை (TFL) தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செயல்பட முடியும் என்றும் ஊபெர் நிறுவனம் கூறுகிறது.
பாதுகாப்பு காரணங்களால் 2017 ஆம் ஆண்டில் ஊபெர் ரக்ஸி சேவை அதன் உரிமத்தை இழந்தது. எனினும் அதன் செயற்பாடுகளுக்கு 15 மாத கால நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த செப்ரெம்பர் மாதத்தில் மேலதிகமாக இரண்டு மாத கால நீடிப்பை ஊபெர் நிறுவனம் பெற்றிருந்தது. இந்தக்கால நீடிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியானது.
பல ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கிய ஊபெர் ரக்ஸி சேவை பல நாடுகளில் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பாரம்பரிய ரக்ஸி சேவைகளின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.
லண்டன் போக்குவரத்துத் துறையின் உரிமம் மற்றும் ஒழுங்குமுறை இயக்குநர் ஹெலன் சப்மன் தெரிவிக்கையில்; லண்டனில் உள்ள தனியார் ரக்ஸி சேவைகளை ஒழுங்குபடுத்துபவர் என்ற முறையில், ஊபெர் நிறுவனம் உரிமம் பெறுவதற்கு தகுதியானதா, சரியானதா என்பது குறித்து இன்று ஒரு முடிவை எடுக்க வேண்டும். பாதுகாப்பே எங்களது முன்னுரிமை என்று குறிப்பிட்டார்.