ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு, இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை ரத்துச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“எமது அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் எவ்வாறானது என்பதை ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் சவால் நிரந்த தருணமாக கருதுகின்றோம்.
சர்வதேச விவகாரங்களில் நாம் கவனமாக பயணிக்க வேண்டியுள்ளது. எமது சர்வதேச கொள்கையானது சர்வதேசதுடன் பிளவுபடாத கொள்கையாகும்.
அதேபோல் எந்த சர்வதேச சக்திக்கும் சாயாது சுயாதீனமான நாடாகவும், எந்தவொரு நாட்டுக்கும் எமது உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாத வகையிலும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
சகல நாடுகளுடனும் நட்புறவு ரீதியில் பயணிக்க வேண்டுமே தவிர எந்த முகாமையும் சார தயாராக இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.