அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம், மக்கள் பிரதிநிதிகள் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக ஜனநாயக கட்சி உள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான ஜோ பிடன், அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முக்கிய போட்டியாக இருப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பிடனின் மகனுக்கு உக்ரேன் நாட்டிலுள்ள எரிவாயு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்புள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அதிபரிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டார். இதனால், அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து விளைவித்துவிட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது என முடிவுசெய்து, அதன் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் அது தாக்கல் செய்யப்பட்டது. அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
இறுதியில், அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 230 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 197 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர்.
பின்னர், பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற டிரம்புக்கு எதிரான 2வது தீர்மானமும் நிறைவேறியது. அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 229 பேரும், அந்த தீர்மானத்தை எதிர்த்து 198 பேரும் வாக்களித்தனர்.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடக்கும். செனட் சபையில், அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 100 உறுப்பினர்கள் உள்ளதால், அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு சிக்கல் இல்லை என்றே கருதப்படுகிறது.