துட்டகைமுனு ஒரு பௌத்த தமிழன். எல்லாளன் ஒரு சைவத் தமிழன். அந்தக் காலத்தில் சிங்களமொழி இருக்கவில்லை. ஆகவே துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது‘இலங்கை சிங்கள தேசம்’ என்ற கருத்து தென்பகுதியில் வலுப்பெற்று வருகின்றது. அப்படியாயின் தமிழரின் இடம் எதுவென நீங்கள் நினைக்கின்றீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதில் வழங்கிய முன்னாள் முதல்வர்,
இதற்கு பதிலளித்த அவர், “இலங்கை, சைவத் தமிழ் மக்களுக்கே உரியது. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே சைவத் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
முதலில் பௌத்தத்திற்கு மாறியவர்களும் அவர்களே. சிங்கள மொழி அப்போது பிறந்திருக்கவில்லை. கி.பி. 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் தான் சிங்களம் என்பது ஒரு மொழியாகப் பரிணமித்தது.
ஆகவே அந்த மொழி வருவதற்கு முன்னர் இலங்கையில் சிங்களவர் இருக்கவில்லை. சுமார் 1300 அல்லது 1400 வருடங்களாகத்தான் சிங்களம் ஒரு மொழியாக பேசப்பட்டு வருகின்றது.
அதற்குமுன்னர் தமிழ் மொழியுடன் பாளிமொழி இருந்தது. துட்டகைமுனு ஒரு பௌத்த தமிழன். எல்லாளன் ஒரு சைவத் தமிழன். அந்தக் காலத்தில் சிங்களமொழி இருக்கவில்லை. ஆகவே துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.