தொழிற்கட்சியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சாரா சம்பியன், எம்மா லெவெல்-பக், ஜோன் குருட்டாஸ், ரோஸி கூப்பர், கிரஹம் மோரிஸ் மற்றும் ரோபி பேர்கின்ஸ் ஆகிய தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தொழிற்கட்சி உறுப்பினர் எம்மா லெவெல்-பக், பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்துக் கூறுகையில்; ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என்று எனது தொகுதி மக்களுக்கு உறுதியளித்திருந்தேன். எனவே அதன்படியே இன்று ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன் என்று கூறினார்.
மேலும் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சியின் நடவடிக்கையை எதிர்கொள்ளத்தயார் என்று பிபிசி செய்திப்பிரிவிடம் கூறினார்.
கடந்த முறை நான் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தேன். அதன் பின்னர் பொரிஸ் ஜோன்சன் ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தத் தேர்தலில் பிரதமருக்கு ஒரு மிகப்பெரிய ஆணை கிடைத்தது. 52 தொழிற்கட்சி ஆசனங்களை நாம் இழந்தோம். நாம் இப்போது நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.
பொதுத் தேர்தலில் மிகவும் மோசமாக தோல்வியடைந்ததன் பின்னணியில் பாராளுமன்றத்தில் முதல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வரலாற்று ரீதியாக எங்களது கட்சி செய்ததைத் தொடர்ந்து செய்வோம் என்று சொல்வது தவறான அழைப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.