அவுஸ்ரேலியாவில் தீவிரமடைந்துவரும் ஆபத்தான காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு பாதி அளவேனும் ஆறுதல் அளிப்பதற்காக அங்கு மழை பெய்துள்ளது.
இந்த மழையினால் சற்று வெப்பம் தணிந்துள்ள போதிலும், காட்டுத்தீ முற்றிலுமாக பரவுவது தடைபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள சிட்னியில் இருந்து மெல்பேர்ன் வரை மிதமான மழையும், நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் கன மழையும் பெய்துள்ளது.
ஆனால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, விக்டோரியா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ ஒன்றாக சேர்ந்து பெருந்தீயாக உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மழை பெய்து சற்று வெப்பம் தணிந்துள்ள போதிலும், காற்று மாசு அபாயகர நிலையில்தான் உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர் ஒதுக்கீடு செய்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 5 மாதங்களாக கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீயினால் 14.5 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலம் தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல கோடிக்கணக்கான வன உயிரினங்களும் உயிரிழந்துள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.