டென்னிஸ் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான மழையினால் பிரித்தானியாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இங்கிலாந்தில் 300 க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் ஐந்து கடுமையான எச்சரிக்கைகள் உயிருக்கு ஆபத்தானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோர்ஸ்ரஷையரில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் சிறிய படகுகள் மூலம் இன்று அதிகாலையில் மீட்புக் குழுக்களால் வெளியேற்றப்பட்டனர்.
தெற்கு வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்டன.
ஸ்ரஃபேர்ட்ஷையர் மற்றும் நொற்றிங்கம்ஷையரில் A வீதிகள் மற்றும் வேல்ஸில் உள்ள போவிஸ் மற்றும் மோன்மத்ஷைர் ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கள் தொடர்ந்து தடைபட்டுள்ளன. ஸ்கொட்லாந்தின் M90 ஃபிரையாற்றன் பாலம் (Friarton Bridge) உட்பட சில பகுதிகளின் வீதிகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், குரொஸ் கன்ட்ரி, கிரேட் வெஸ்ரேர்ன் ரயில்வே, மேர்ஸிரெயில், நோர்தேர்ண், சவுத் வெஸ்ரேர்ன் ரயில்வே, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்ரெயில் போக்குவரத்துத் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
யோர்க்கில் ஊஸ் (Ouse) நதி அதன் இயல்பான நீர் மட்டத்திலிருந்து 4.36 மீற்றர் உயர்ந்துள்ளது. நீர் மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆற்றின் அருகே பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புக்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் சியாரா புயலினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மோசமாக பாதிக்கப்பட்ட மேற்கு யோர்க்ஷயர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவ பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ வீரர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் ஜோர்ஜ் யூஸ்ரிஸ், இன்று காலை பிபிசியிடம் தெரிவிக்கையில்; தீவிர வானிலை நிலைமைகளைச் சமாளிக்க அரசாங்கம் 2.5 பில்லியன் பவுண்ஸ் செலவு செய்துள்ளது என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 பில்லியன் பவுண்ஸ் ஒதுக்கீடு செய்ய உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
யோர்க்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த யூஸ்ரிஸ், வெள்ளத்தில் இருந்து நகரத்தைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கு 80 மில்லியன் பவுண்ஸ் செலவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் திட்டமிடல் பணிகள் இருப்பதாகவும் கூறினார்.
நொற்றிங்கம்ஷையர், லெஸ்ரர்ஷையர், டார்பிஷையர், ஷ்ரோப்ஷையர், ரெல்ஃபேர்ட் மற்றும் ரெக்கின், வோர்ஸ்ரஷையர், ஹெறிஃபேர்ட்ஷையர் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிதி திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தின் வெள்ளம் மற்றும் கடலோர நிர்வாகத் தலைவர் ஜோன் கேர்ரின் தெரிவித்ததன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்திற்கு அதிகமான வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இன்று காலை 6:00 மணிக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கையுடன் மொத்தமாக 634 ஐ எட்டியுள்ளது.
வேல்ஸில் 60 க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளும் ஸ்கொட்லாந்தில் 20 க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.