ஐ.நா. பிரேரணையிலிருந்து விலகுவதென அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தினால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்திருந்த அவர், ஜெனீவா கூட்டத்தொடர் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என கூறினார்.
மேலும் பொதுத் தேர்தலில் தமது வெற்றித் தொடர்பாக நம்பிக்கையின்றி இருக்கும் அரசாங்கம் மக்கள் மத்தியில் தம்மை வீரர்களாக காண்பித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு அறிவிப்பை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கம் இந்த மூன்று மாத காலத்திற்குள் மக்களை கவரும் வகையில் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காததால் பொதுத் தேர்தலில் அரசாங்க தரப்பினரின் வெற்றி தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது என சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
மேலும் இவர்கள் ஜனாதிபதி தேர்தலின்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், தேசிய பாதுகாப்பு, இன அடிப்படைவாதத்தை முன்னிலைப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்தே ஆட்சிகளை கைப்பற்றினர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பொதுத் தேர்தலை இலக்குவைத்தே ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அறிவிப்பு விடுத்துள்ளனர். இவர்கள் மக்கள் மத்தியில் தம்மை வீரர்களாகவும், தாம் சர்வதேசத்திற்கு அஞ்சி செயற்படுவதில்லை என்றும் காட்டுவதற்காக இதனை செய்துள்ளார்கள் என சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
இவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட இந்த நடவடிக்கையினால் சாதரண மக்களே பெருமளவில் பாதிக்கப்பட போவதாகவும் சமன் ரத்னப்பிரிய கூறினார்.