ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரியுள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக வேகமாக பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.
இதனால், பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள ஈரான், மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை நீக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா பரவுவதற்கு மத்தியிலும் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. முடிந்த அளவு விரைவில் கொரோனாவில் இருந்து ஈரான் மீண்டு வரும்’ என கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரான் மீது தொடர்ந்தும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார்.
உள்நாட்டுப் போர் நடைபெறும் யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கடத்தலுக்கு உதவியதாகவும், அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பொருளாதார தண்டனையாக, ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822ஆக அதிகரித்துள்ளது.