பிரித்தானியாவில் உள்ள அனைவரும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இப்போது அத்தியாவசியமற்ற பயணத்தையும் மற்றவர்களுடனான தொடர்பையும் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
கடுமையான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மக்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவேண்டும் மற்றும் முடிந்தவரை பப், கிளப், உணவு விடுதிகள், திரையரங்குகளைத் தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இருமல் அல்லது காய்ச்சல் உள்ள எவரும் வீட்டில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும். அனைத்து வயதான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் உடனடியாகச் சுய-தனிமைப்படுத்தலைத் தொடங்கவேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
14 நாட்கள் வீட்டில் தங்கியிருப்பது என்பது உணவு அல்லது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட நீங்கள் வெளியே செல்லாமல் இருப்பதாகும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
கோப்ராக் குழுவின் இன்றைய அவரசக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர், இங்கிலாந்து தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிறிஸ் விற்றி மற்றும் இங்கிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சேர் பற்றிக் வலன்ஸ் ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
இங்கிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகரான சேர் பற்றிக் வலன்ஸ் கூறுகையில்; ஒரு கட்டத்தில், பாடசாலைகளை மூடுவது உட்பட ஏனைய நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்று தெரிவித்தார்.
அந்த விடயங்களை சரியான நேரத்தில் செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அரசாங்கத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிறிஸ் விற்றி கூறுகையில்; எந்தவொரு தனிநபரும் வைரஸ் பாதிப்பினால் இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று குறிப்பிட்டார்.
ஆனால் வீட்டிலுள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினால், அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.