சென்னை,
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா ‘வார்டு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 280-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் தெற்கு ரெயில்வே சார்பிலும், ரெயில்வே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு கொரோனா வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தெற்கு ரெயில்வேக்கு உள்பட்ட சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களிலும் ரெயில்வே ஆஸ்பத்திரிகள் செயல்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து ரெயில்வே ஆஸ்பத்திரிகள் மற்றும் விடுதிகளில் மொத்தமாக 700 படுக்கை வசதி கொண்ட கொரோனா ‘வார்டு’ தயார் நிலையில் உள்ளது. சென்னை கோட்டத்தில் பெரம்பூர் மற்றும் எழும்பூரில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் பிரத்யேக ‘வார்டும்’, சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
இதுவரை எந்த ஒரு கொரோனா பாதித்த நபரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. ரெயில்வே ஊழியர்களுக்காக மட்டும் சிகிச்சை அளிக்க இந்த ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வந்தது. ஒருவேளை அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டால், ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.