யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே
ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள்
தெரிவித்துள்ளன.
கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா,
களுத்துறை மாவட்டங்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திலும்
ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்தத் திடீர் தீர்மானம் மக்களிடையே பெரும்
பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஊரடங்குச் சட்டம்
தளர்த்தப்பட்டபோது பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று
பாதுகாப்புத் தரப்பினர் அரச உயர் மட்டங்களுக்கு அறிவித்திருந்தனர்.
அதனை விட கொரேனா தொற்றுக்குரிய மதபோதகர் கடந்த 15ஆம்
திகதியே ஆராதனை நடத்தியிருந்ததும், அதன் பின்னர் தாவடியில்
கொரோனோ தொற்றுக்குரியவர் இனம் காணப்பட்டதும்
இடம்பெற்றிருந்தது.
ஆகக் குறைந்தது 14 நாட்களுக்குள் அவர்களிலிருந்து வேறு எவருக்கும்
பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவத் துறையினரிடம் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல், கொரோனா காவிகள் இருக்கக்
கூடும் என்ற அச்சம் மருத்துவத் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் ஊடரங்கைத் தளர்த்துவதானது, கொரோனா
வேகமாகப் பரவுவதற்கு வழிகோலும் என்பதால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்
ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட வேண்டும் என்று மருத்துவத்
துறையினர் கோரியிருந்தனர். இதனாலேயே ஊரடங்கு நீடிப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.