ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வரும் 5ஆம் திகதி அவருடைய நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முற்பகல் 10.45இக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதுதொடர்பில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்து பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது கட்சியினர் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது நிகழ்ச்சிகளில் 200 பேருக்கும் மேற்படாத வகையில் மக்கள் கலந்துகொள்ளலாம் என்பதோடு அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு அ.தி.மு.க. வினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.