மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவர் இதன்போது கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காவல்துறை நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும், இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்