தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும் என்று இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டிருக்கும் அவர் இவ்வாறு இறுமாப்புடன் பேசுவது பொருத்தமற்றதோடு அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கினால் அதற்கு கூட்டமைப்பே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூட்டடைப்பை தடை செய்யாது விட்டமை தவறு என்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அது தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அடக்கப்பட்டமையினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப்போராடுகின்ற மாபெரும் சக்தியாக இந்நாட்டில் வளர்ந்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.