புரவி புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் சீரற்ற காலநிலையினால், யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த இயற்கை அனர்த்தங்களால், 15 ஆயிரத்து 459 குடும்பங்களை சேர்ந்த 51 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில், சீரற்ற காலநிலையினால், இருவர் உயிரிழந்தனர் என்றும், 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“மழை, காற்று, வெள்ளம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு 976 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 540 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் 53 வீடுகள் முழுமையாகவும், 2008 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.