யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் கொட்டிய மழையினால், யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புரவி புயல் கரையைக் கடந்த போது, கடந்த 2ஆம், 3ஆம் திகதிகளில் கடும் மழை பெய்ந்து வெள்ளம் ஏற்பட்டிருந்தது.
நேற்றுக்காலையில் வானிலை சீரடைந்திருந்ததால் வெள்ளம் சற்று வடியத் தொடங்கிய நிலையில், நேற்று மாலை கடுமையான இடி முழக்கத்துடன் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது.
இன்று காலை வரை இந்த மழை நீடித்துள்ளது. இன்று பகலிலும், மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.
இதனால், யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிக்களில் உள்ள வர்த்தக நிலையங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மேலும், யாழ். நகரை அண்டிய கரையோர கிராமங்களிலும், மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு, இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.
மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் ஆபத்து இருப்பதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.