புரவி புயல் வலுவிழந்து இலங்கைக்கு அப்பால் நகர்ந்து சென்ற போதும், வடக்கில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது.
புயல் பலவீனமடைந்து மன்னாருக்கு மேற்கே 145 கிலோ மீற்றர் தொலைவில் காற்றழுத்தமாக நிலைகொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகிறது.
நேற்று மாலையில் இருந்து விடிவிடிய மழை கொட்டியதுடன், இன்று பகலிலும் கடும் மழை பெய்தது.
நாளையும் சுமார் 75 மில்லி மீற்றர் வரை வடக்கில் பெய்யலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நீர்வளச் சபையில், 173.4 மில்லி மீற்றர் மழை பதிவாளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் 140 மில்லிமீற்றரும், அச்சுவேலியில் 69 மில்லி மீற்றரும் மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மன்னாரில் 22 மில்லி மீற்றரும் வவுனியாவில் 10 மில்லி மீற்றரும் இதே காலப்பகுதியில் பதிவாகியுள்ளது.
புரவி புயலினால் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இங்கு 20 ஆயிரத்து 707 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
அதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.