கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், எதிர்வரும் திங்கட்கிழமை மீளத் திறக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீள இயக்குவதற்கு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி, -தொண்டமான் நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் நவம்பர் 24ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்டன.
அதேவேளை, காரைநகரில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.