உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து பெப்ரவரி நடுப்பகுதியில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் உள்ளதாக மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல், உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்.சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
உலகசுகாதார ஸ்தாபனம் கடந்த வாரம் இதனை தெரிவித்துள்ளது எனக் கூறிய அவர் சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் இரு குழுக்களை அமைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் அக்குழுவினர் அமெரிக்கா, ர ஷ்யா சீனா இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து வருகின்றனர் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் மருந்தினை எந்த நாட்டிடமிருந்து பெறுவது என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.