யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் தொடக்கம் இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கடும் மழையினால், குடாநாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 193.9 மில்லி மீற்றர் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
நேற்று பிற்பகல் தொடக்கம் இன்று அதிகாலை வரை பெய்த மிக கடுமையான மழையினால் யாழ் நகரில் உள்ள பெரும்பாலான வீதிகள், தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
இதனால் பல குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம், மல்லாவி, திருமுறிகண்டி பகுதிகளில் நேற்று மாலை தொடக்கம் பெய்த கடும் மழையினால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பெருமளவு மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்திலும் நேற்று மாலை பெய்த கடும் மழையினாலும், கனகாம்பிகைக் களம் வான்பாய்ந்து வருவதாலும் பல கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி விவசாயப் பண்ணையில் 86 மில்லி மீற்றரும், இரணைமடுவில் 65 மில்லிமீற்றரும் அக்கராயனில் 58 மில்லி மீற்றரும் நேற்ற மழை கொட்டியது.
இதனால் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அதேவேளை புரெவிப் புயல் மற்றும் அதற்குப் பின்னரான மழையுடன் கூடிய காலநிலையினால், 2 ஆயிரத்து 16 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.