வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைதுசெய்வதற்குப் காவல்துறையினர் பிரதேச சபை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் தவிசாளர் சபைக்கு வருகை தராததால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
அதேவேளையில் நிரோஷின் இல்லம், அவரது மனைவியின் தாயாருடைய இல்லாம் என்பன காவல்துறையினரால் சல்லடை போட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்த இரண்டு இடங்களிலும் நிரோஷ் இருக்கவில்லை. நிரோஷ் எங்கே எனக் கேட்டு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் தெரியாது எனப் பதிலளித்தனர்.
இதேசேநரம் விடயமறிந்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பிரதேச சபைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியைப் புனரமைக்க யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் காவல்துறையினரால் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரதேச சபை என்பது அதிகாரப் பகிர்வுக்கான ஓர் அலகு என்ற அடிப்படையில் மத்திய அரசின் சட்டத்துக்கு விரோதமானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது எனவும், அபிவிருத்திக்கு நாம் தடை அல்லர் எனவும், தவிசாளர் நிரோஷ் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.