சிறிலங்கா காவல்துறையினரால், கைது செய்வதற்காக தேடப்பட்டு வந்த, வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு மல்லாகம் நீதிமன்றம் இன்று முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அவர், சட்டத்தரணிகளூடாக தாக்கல் செய்திருந்த முன் பிணை கோரும் மனு, இன்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை புனரமைப்பதற்கு, சபையின் அனுமதியின்றி, நாட்டப்பட்ட விளம்பரப் பலகையை அகற்றியது தொடர்பாக, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை கைது செய்ய சிறிலங்கா காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து கைது செய்வதற்கு தடை கோரி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்பிணை மனு ஒன்று தவிசாளர் நிரோஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த விசாரணைகளை அடுத்து, தவிசாளர் நிரோசுக்கு முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.