மட்டக்களப்பிலும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம், மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவுப்பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.
“மனித உரிமைகள் மதிக்கப்படாத நாட்டிலிருந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்” என்ற தொனிப்பொருளில் இந்த கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துவதற்கு மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த தாய்மாரை, அங்கிருந்து செல்லுமாறு சிறிலங்கா காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்தனர்.
சிறிலங்கா காவல்துறையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளார் மற்றும், அருட்தந்தையர்கள், காணாமல்போனவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.